வளர்பிறை

Tuesday, March 1, 2011

நின்ற சொல்லர்

   “டூருக்கு ஒய்ஃப் எல்லாம் வேண்டாம்டா. நாம மட்டும் போவோம்.”
 
    “ஆமா, நாம இஷ்டத்துக்கு இருக்கலாம். பல விஷயத்துக்கும் வசதி!”
  
     மனைவியிடம் எப்படிச் சொல்லிக் கிளம்புவது. “பாண்டிச்சேரிக்கு ரெண்டு நாள் போயிட்டு வர்றேன்” என்று சொல்லமுடியாது.

      இந்த மாதம் கல்யாணம் போன்ற நிகழ்வுகள் இல்லை. நிச்சயமாக பாண்டிச்சேரியில் இல்லை. எந்தவிதமாகச் சொல்வது? யோசித்தவாறே உள்ளே நுழைய முற்படுகையில்,வீட்டின் கதவுக்கு அப்பால் மனைவியின் குரல் கேட்டது.

    "தனியா எங்கயும் போகமாட்டார். எப்பப் பார்த்தாலும் என்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருப்பார். நான் இல்லாம அவரால எதுவும் முடியாது...”

    அவள் யாரிடமோ சொல்லிக்கொண்டிருக்கும் குரல்.

    ஆணாதிக்கதை ஏற்றுக்கொண்டிருக்கிற பெண்குலத்தின் வம்சாவளிக் குரல்.

     பெண்ணைக் காதலின் பெயரிலோ, நட்பின் பெயரிலோ, மகன் - தந்தை - உடன்பிறந்தவன் - கணவன் போன்ற உறவுகளின் பெயரிலோ ஆண் ஆண்டுகொண்டுதானிருக்கிறான்.

     சோம்பேறித்தனத்தாலும், உரிமையாலும், கணவன் என்ற மேலாதிக்கத்தாலும் நான் அன்பு கலந்த வார்த்தைகளால் அவளைக் குற்றேவல் செய்விப்பதை, அவள் புரிந்துகொண்ட விதத்தை எண்ணி எனக்குப் பரிதாபம் வந்தது.

        சொன்ன சொல் மாறாதவர்;
       எப்போதும் ஆனந்தத்தைத் தருவார்;
       தொட்ட என் தோள்களை விட்டுப் பிரியார்;
       
       வண்டு ஒன்று,
       மலையுச்சிச் சந்தன மரத்தில்,
       குளிர்ந்த தாமரையிதழூதி எடுத்தத் தேனைச் 
       சேகரிப்பது மாதிரியான உயர்ந்த நட்பு என்னவருக்கு;

       நீரின்றி உலகில்லை;
       அவரின்றி நானில்லை.
       
       என் நெற்றியில்
       அவரைப் பிரிவதால் உண்டான சுருக்கத்துக்கு அஞ்சுவார்;

       என்னைப் பிரிந்து துன்பப்படுவாரா.
       செய்வதையும் விளைவுகளையும் அறியாதவர்.



       இவ்வாறாக நற்றிணையில் அழகானதொரு பாடலைக் கபிலர் பாடியுள்ளார். தலைவனின் பிரிவைத் தோழி, தலைவிக்கு உணர்த்தியபோது தலைவி சொன்னது.

      குறிஞ்சித் திணை                                        தலைவி கூற்று

      நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;
      என்றும் என் தோள் பிரிபு அறியலரே;
      தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
      சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
      புரைய மன்ற, புரையோர் கேண்மை;
      நீர் இன்று அமையா உலகம் போலத் 
      தம் இன்று அமையா நம் நயந்தருளி,
      நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
      சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

     அவன் நீர்; அவள் உலகம். அவன் புரையோன்(மேலானவன்); அவள் உலகு(தாழ்மையானவள்). பள்ளத்தை நாடிச் செல்லும் நீர். 

     மேலான அவனது நட்பும் மேலானதே. அதற்கு உவமை மலையில் உள்ள சந்தன மரத்தில் சேகரிக்கப்பட்டத் தேன்!

      தன்னைத் தாழ்த்திக்கொண்டு, கணவனை உயர்த்தும் பெண்கள், சங்க காலத்திலிருந்து, கணினிக் காலம் வரை இருந்துதான் வருகிறார்கள். இது இவ்வாறே தொடருவது என்னைப் போன்ற, தப்பு செய்வதற்குப் பாதி பயம், மீதி பிரியம் என்ற ரெண்டுங்கெட்டான்களுக்கு வசதி!